பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - மருத்துவர் ரஜினிகாந்த் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
கரூரில் பள்ளி மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
கரூர் நகர பகுதியில் உள்ள வடக்கு பிரதட்சிணம் சாலையில் டாக்டர் ஜி.சி.ஹாஸ்பிடல் உள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் ரஜினிகாந்த், இதே மருத்துவமனையில் காசாளராக பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். காசாளராக பணிபுரிந்து வந்த பெண்னுக்கு 11ம் வகுப்பு படிக்கும் பெண் உள்ளார்.
சிறுமி பள்ளி முடிந்ததுடன் தாய், பணிபுரியும் மருத்துவமனைக்கு எப்போதும் வருவது வழக்கம். அத்துடன் மாணவி அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் நட்பாக பழகி வந்திருக்கிறாள். இந்நிலையில், விடுமுறை என்பதால் தனது சம்பளப் பணத்தை வாங்க தனது மகளை மருத்துவமனைக்கு அப்பெண் அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது மருத்துவர் ரஜினிகாந்த் பள்ளி மாணவியை தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அந்த மருத்துவரின் அறையிலிருந்து கூச்சலிட்ட படியே வெளியில் ஓடியதுடன், நடந்தவற்றை தாயிடம் கூறி இருக்கிறாள். இதனால், கோபம் அடைந்த மாணவியின் தாய் இது குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவா் ரஜினிகாந்த் மற்றும் அவரது மேலாளா் சரவணன் ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், தனிப்படை போலீசார் இன்று ரஜினிகாந்தை கைது செய்தனர். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர்.