கைதியின் முதுகில் பயங்கரவாதி என முத்திரை - விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
கைதி ஒருவர் அளித்த புகாரின் பேரில், சிறையில் கைதிகளுக்கு தரப்படும் சித்ரவதைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
பஞ்சாப், பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கரம்ஜித் சிங் (28). இவர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மன்சா மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அங்கு ஆஜர்படுத்தப்பட்ட கர்ம்ஜித் சிங் கூறுகையில், சிறையில் கைதிகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறார்கள். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, தனி அறைகள் ஒதுக்கப்படவில்லை. கைதிகளை தவறாக நடத்துவதற்கு எதிராக குரல் கொடுத்தால், என்னை சிறை கண்காணிப்பாளர் தாக்குகிறார். தொடர்ந்து சித்ரவதை செய்து வருகிறார். பயங்கரவாதி என முத்திரை குத்துகிறார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்றார்.
இந்த குற்றச்சாட்டை சிறை கண்காணிப்பாளர் பல்பிர் சிங் திட்டவட்டமாக மறுத்தார். இதனையடுத்து, கைதியின் புகார்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்த, சிறைத் துறையின் ஏ.டி.ஜி.பி., சின்ஹாவுக்கு, மாநில துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.