கையில் குழந்தை வைத்திருந்த நபர் மீது போலீசார் கண்மூடித் தாக்குதல் - நெஞ்சை கனமாக்கும் அதிர்ச்சி வீடியோ

samugam viral-video police-attack
By Nandhini Dec 10, 2021 06:11 AM GMT
Report

தன்னை அடிக்கும் போலீசாரைப் பார்த்து, ‘என் குழந்தைக்கு காயம் ஏற்பட்டுவிடப்போகிறது’ என்று அந்த நபர் தொடர்ந்து கூறியபோதும் தாக்குதல் நடத்திய போலீசாரின் வீடியோவால் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

கையில் குழந்தை வைத்திருந்த நபர் மீது போலீசார் லத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம், அக்பர்பூர் எனும் ஊரில் நேற்று மதியம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அக்பர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிலர் பிரச்சினையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, அங்கு உள்ளூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசார், அந்த மருத்துவமனையின் முன்பிருந்தவர்கள் மீது லத்திகளால் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது கையில் குழந்தையுடன் இருந்த நபர் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்.

அப்போது, அங்கிருந்த காவல் ஆய்வாளர், கையில் குழந்தையை வைத்திருந்த நபர் மீது லத்தியால் பலமாக அடிப்பதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். தன்னை அடிக்கும் போலீசாரை பார்த்து, ‘சார்... குழந்தைக்கு காயம் ஏற்பட்டுவிடப்போகிறது’ என்று அந்த நபர் கூறியபடி அடியை வாங்குகிறார்.

இவரின் அடியை தாக்கிக் கொள்ள முடியாமல், குழந்தையுடன் அந்த நபர் ஓடினார். ஆனால், அவரை விடாமல் விரட்டிச் சென்ற போலீசார் குழந்தையை அவரின் கையில் இருந்து பறிக்க முயற்சி செய்தனர்.

‘சார்... இது தாயில்லாத குழந்தை’ என்று அந்த நபர் கெஞ்சினார். பின்னர், அந்த நபரை போலீசார் விட்டுவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து, டி.எஸ்.பி அருண் குமார் சிங் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது -

அந்த மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு வளாகத்தை மூடி பிரச்சினையில் ஈடுபடுவதாக மருத்துவமனையிலிருந்து புகார் வந்தது. இதனால், அங்கு சென்றோம். கையில் குழந்தையை வைத்திருந்த நபர் அந்த மருத்துவமனையின் ஊழியர் தான். ஆனால் அவரும், அவரின் சகோதரரும் அவ்வப்போது மருத்துவமனையில் தொந்தரவு செய்து வருவதாக ஏற்கெனவே எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன.

இதனையடுத்து, சிறிதளவு கடுமை காட்ட நேர்ந்தது. உண்மையில் குழந்தைக்கு அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே குழந்தையை அவரிடமிருந்து கைப்பற்ற முயற்சித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசாரின் இந்த விளக்கத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனையடுத்து, மாவட்ட போலீஸ் நிர்வாகத்தினர், தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், இச்சம்பவம் குறித்து விசாரித்து தவறிழைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.