முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய குழந்தை
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று மாலை டெல்லியில் தகனம் செய்யப்பட உள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையிலிருந்து நேற்று நண்பகல் ஆம்புலன்ஸ் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பிபின் ராவத்தின் இல்லத்தில் காலை 11 மணி முதல் 12. 30 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சென்னை, அனகாபுத்தூரில், கிரீன் வேளச்சேரி அமைப்பும், பொதுமக்களும் இணைந்து பிபின் ராவத் திருவுருவப் படத்தை வைத்து, ராணுவ விமான விபத்தில் உயிரிழந்த 13 பேருக்கும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது இராணுவத்தில் வீரமரணம் அடைந்த பார்த்திபனின் தந்தை மேஜர் நடராஜன், மருத்துவர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது மருத்துவர் சஞ்சய்குமார்- லட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை அருந்ததி, பிபின் ராவத் திருவுருவப்படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.