தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - ஓபிஎஸ் தம்பி பங்கேற்பு
அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெய ஹரிணிக்கும், பூண்டி வாண்டையார் பேரன் ராமநாத துளசி வாண்டையார் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையில், தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் டிடிவி.தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்றார்.
இது குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதிமுகவுக்குள் மீண்டும் ஓர் புதிய சர்ச்சை சென்று கொண்டிருக்கையில், ஓபிஎஸ் தம்பி தினகரன் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டது அதிமுகவினரிடையே கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.