மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் - சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அதிகாரிகள்!

samugam-old-lady-viral-news
By Nandhini Dec 08, 2021 04:11 AM GMT
Report

குளச்சலில் பேருந்திலிருந்து பேருந்து நடத்துனரால் இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடைபெற்ற சம்பவத்திற்கு மூதாட்டியை நேரில் சந்தித்து போக்குவரத்து அதிகாரிகள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி செல்வம். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மீன் வியாபாரம் செய்துவிட்டு வீட்டுக்கு செல்ல குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து வாணியக்குடி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார்.

அப்போது, மூதாட்டியின் உடலில் மீன் நாற்றம் வீசியது. இதனால் நடத்துனர், உன் மீது மீன் வாடை வருகிறது.. முதலில் கீழே இறங்கு... என்று மூதாட்டியை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த மூதாட்டி செல்வம், பேருந்து கட்டுப்பாட்டு அறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மூதாட்டி செல்வம் பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்ணீர் சிந்தியபடி கத்தி கூச்சலிட்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மூதாட்டி செல்வத்தை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துனர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட பேருந்து நடத்துனர் மணிகண்டன், ஓட்டுநர் மைக்கேல் மற்றும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை பொதுமேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார்.

மேலும், போக்குவரத்துத்துறை கன்னியாகுமரி மாவட்ட துணை இயக்குநர் ஜெரோலின், மூதாட்டி செல்வத்தை அவர் மீன் விற்பனை செய்யும் இடத்திற்கு நேரில் சென்று நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தகவலை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.