திருநங்கையாக மாறிய மகன் - ஆட்களை வைத்து கொலை செய்த கொடூரத் தாய்
சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து தாயே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த உமாதேவி. இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகன் நவீன்குமார். இவர் சமீபத்தில் திருநங்கையாக மாறினார். இதனையடுத்து அவர் தனது பெயரை அக்க்ஷிதா என்று மாற்றியுள்ளார்.
இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் கடந்த வாரம் காயங்களுடன் நவீன்குமார் கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து, சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால் அவருக்கு ஹார்மோன் ஊசி போட்டு ஆணாகவே மாற்ற தாய் உமாதேவி முயற்சி செய்து வந்துள்ளார். இதற்காக நவீன்குமாரை சில ஆட்களை வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.
ஆனால், அதற்கு நவீன்குமார் முரண்டு பிடித்துள்ளார். இதனால், அவரை கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த நவீன்குமார் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, தாய் உமாதேவி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.