பிரபல ரவுடி வெட்டிக் கொலை - குளித்தலையில் பெரும் பரபரப்பு - விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூரைச் சேர்ந்த ரவுடி கோபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கோபால் (53). இவருடைய மனைவி பொன்னுமணி. இவர்களுக்கு தமிழ்பொன்னி, கயல்பொன்னி என இரு மகள்களும், நரேன் கார்த்திக், நரேன் ராஜ் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.
அகில இந்திய தேவேந்திர குல தலைவர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான இவர் மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டருகே உள்ள கோபாலுக்குச் சொந்தமான வயல்வெளியில் மர்ம நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கோபாலின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.