‘அழுகிய நிலையில் தண்ணீர் தொட்டியில் கிடந்த குழந்தை’ - சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி
பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தாயை போலீஸ் கைது செய்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2011ம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு அப்பெண் தனது மாமியார் மற்றும் கணவரோடு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், அப்பெண் கடந்த 2013ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனையடுத்து, மாமியாரும் மற்றும் கணவரும் அடுத்து அந்தப் பெண்ணை ஒரு ஆண் வாரிசை பெற்று கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி டார்ச்சர் செய்து வந்தனர்.
இதனால் அப்பெண் அடுத்தடுத்து பலமுறை கருவுற்றாலும், அவருக்கு உருவானது பெண் கரு என்று அவரின் மாமியார் ஏதோ மந்திரம் மூலம் கண்டறிந்ததாக கூறி, அந்த கருவையெல்லாம் கலைத்து விட்டிருக்கிறார்.
இதையும் மீறி அப்பெண் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். இதனால், அவரின் மாமியார் மற்றும் கணவர் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி அவரை தனியாக வசிக்க அனுப்பி விட்டுள்ளனர்.
பின்னர் அப்பெண் அவரின் பெற்றோரோடு வாழ்ந்து வந்தாள். இந்நிலையில், பெண் குழந்தையால் மனம் வெறுத்த அப்பெண் அந்த மூன்று மாத குழந்தையை அங்கிருந்து தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றிருக்கிறாள்.
பிறகு, அப்பெண் தன் குழந்தையை யாரோ கடத்தி சென்ற விட்டதாக போலீசிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்து அந்த பெண் தன் குழந்தையை கொன்றதை கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.