40 வயது காதலியை கொலை செய்து சாக்கு மூட்டையில் வீசிய இளைஞர் - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்

murder arrest samugam
By Nandhini Jan 02, 2022 06:55 AM GMT
Report

நாமக்கல் அருகே உள்ள விவசாய கிணற்றில் சாக்குமூட்டையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர். கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண், கொசவம்பட்டியை சேர்ந்த கணவரை இழந்த 40 வயதான லலிதா என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து, அதே பகுதியை சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான 26 வயதான சுரேந்தர் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த விசாரணையில் லலிதாவை அடித்துக் கொலை செய்ததாக சுரேந்தர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை கைது செய்து, லலிதாவின் 4 பவுன் நகையை அவரிடமிருந்து மீட்டனர்.

இது குறித்து மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், லலிதாவின் கணவர் 20 ஆண்டுக்கு முன்பே இறந்துவிட்டார்.

இந்நிலையில், சுரேந்தரின் பெற்றோர் நடத்தி வந்த மளிகைக்கடை அருகில் லலிதா கடலை வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது, லலிதாவுக்கு, சுரேந்தர் சிறுசிறு உதவிகளை செய்து வந்தார்.

நாளடைவில் இவர்களுடைய நட்பு காதலாக மாறியது. இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமானது. இந்நிலையில், சுரேந்தருக்கு அவருடைய பெற்றோர்கள் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இதனால் சுரேந்தர், லலிதாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஆத்திரமடைந்த, லலிதா அவரிடம் வேறு யாரையும் நீ திருமணம் செய்யகூடாது. நாம் சென்னைக்கு சென்று பிழைத்துக்கொள்ளலாம் என அழைத்திருக்கிறார்.

இதனால், இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி லலிதாவை ஒரு காரில் அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்ற சுரேந்தர் அவரை அடித்து கொலை செய்து, சாக்கு மூட்டையில் திணித்து கிணற்றில் வீசிவிட்டு சென்று விட்டார்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சுரேந்தரை கைது செய்து, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.