காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தப்பா - மகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வழக்கில் பரபரப்பு
தீர்ப்பு கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகள் நந்தினி (19). நந்தினி ப்ளஸ் டூ வரை படித்து முடித்து விட்டு அருகில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
இதனையடுத்து, நந்தினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. நந்தினியின் தாயார் ஏற்கெனவே இறந்து விட்டார். நந்தினியின் காதலுக்கு அவரது தந்தை வெங்கடாஜலம் ஆதரவு தெரிவித்தார்.
அதே சமயம், வெங்கடாசலத்தின் உடன் பிறந்த சகோதரர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த ராஜூ வயது (41) எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
நிச்சயமாக காதல் திருமணம் செய்துகொள்ள கூடாது என்று மிரட்டியதுடன், சுடும் சொற்களைப் பேசி நந்தினியை காயப்படுத்தி வந்துள்ளார் இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி குளித்தலை பகுதியில் நடைபெற்ற திருவிழாவுக்காக ராஜூ தனது குடும்பத்தாருடன் வெங்கடாஜலம் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, இந்த காதல் விவகாரம் தொடர்பாக நந்தினியுடன் ராஜு வாக்குவாதம் செய்திருக்கிறார். இதில் ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு அன்றிரவு நந்தினி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், இன்று இவ்வழக்கை விசாரித்த மகிளா விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி நஸிமாபானு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த ராஜுவுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 1000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, குற்றவாளி ராஜுவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். கரூர் அருகே திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் சித்தப்பா, ஆத்திரத்தில் தனது உடன்பிறந்த சகோதரனின் மகளையே மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.