படுகொலை செய்த சிறுவனின் தாயாரிடம் செல்போனில் கடைசியாக பேசிய எஸ்எஸ்ஐ - நடந்தது என்ன?
கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பூமிநாதன், கடைசியாக கொலை செய்த சிறுவனின் தாயாரிடம் 23 நிமிடங்கள் பேசிய ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கீரனூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேரையும் துரத்தி சென்றார்.
அவர்களை ரயில்வே சுரங்கப்பாதை அருகே மடக்கிப் பிடித்தார் பூமிநாதன். இதனையடுத்து, இது குறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு சிறப்பு உதவியாளர் சேகர் என்பவருக்கு தகவல் கொடுத்தார்.
பிறகு, தனது செல்போனிலிருந்து அவருக்கு லொகேஷனையும் ஷேர் செய்தார். இதன் பின்னர், பிடிப்பட்ட 2 சிறுவர்கள் உட்பட 3 பேரில் ஒருவரின் தாயாரிடம் எஸ்எஸ்ஐ பூமிநாதன் 23 நிமிடங்கள் தொலைபேசியில் பேசி அந்தச் சிறுவனைப் பற்றிய விபரங்களை கேட்டறிந்துள்ளார்.
எஸ்எஸ்ஐ பூமிநாதன் கடைசியாக அந்த நபரின் தாயாரிடம் பேசிய செல்போன் உரையாடலை ஆதாரமாக கொண்டு தான் தற்போது 3 பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.