சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் : 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
ஆடு திருடியவர்களை பிடிக்க விரட்டி சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களை பிடிக்க விரட்டி சென்றபோது திருச்சி நாவல்பட்டு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி தலைமையில், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடம் அருகே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். நேற்றிரவு குற்றவாளிகள் குறித்த முக்கிய தடயங்கள் கிடைத்திருப்பதாக காவல்துறை ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.
தஞ்சை, புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட 4 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.