திருடர்களை பிடிக்க முயற்சி செய்த எஸ்எஸ்ஐ கொடூரமாக வெட்டிப் படுகொலை - திருடர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருடர்களை பிடிக்க முயற்சி செய்த எஸ்எஸ்ஐ கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பூமிநாதன். இவர் அப்பகுதியில் நீண்ட நாட்களாக நடந்து வந்த ஆடு திருட்டை தடுக்க திட்டமிட்டிருந்தார்.
இதனையடுத்து, நேற்று இரவு புதுக்கோட்டை கீரனூர் அருகே ஆடு திருடர்களை விரட்டிச்சென்று மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே பிடிக்க முயற்சி செய்தார். இதனால், ஆத்திரம் அடைந்த அக்கும்பல் அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றது. படுகாயம் அடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, திருச்சி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
இவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை பிடிக்க 2 டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.