ஏன் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன? ஆய்வுக்கு உட்படுத்திய 5000 பேரில் 2000 பேருக்கு பாதிப்பு
கோவையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், 5000 மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதில் சுமார் 2000 மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளாக, 0 முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் குறைபாடுகளை களைய, பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பு பயிற்சி, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கோவையில், 2020 மே மாத நிலவரப்படி, 72 மாற்றுத்திறன் குழந்தைகள், 0 முதல் 6 வயதுக்குள் உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகளின் பெற்றோருக்கு 'ஆன்லைன்' வாயிலாக ஆயத்த மையங்களில், சிறப்பு பயிற்சி மாவட்ட அளவில் நடைபெற்றது.
அதில், 60 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கண், காது, உடல் உறுப்புகள் பாதிப்பு மற்றும் மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளை நேர்மறையாக அணுகும் முறைகள், பிறரை சார்ந்து இருப்பதை படிப்படியாக குறைத்தல், சுயசுத்தம் பேணுதல், சிகிச்சை முறை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் கூறியதாவது -
ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக, 0 முதல் 6 வயது உள்ள குழந்தைகளை ஆய்வுகளின் மூலம் கண்டறிந்து, உரிய பயிற்சி குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
கோவையில், 0 முதல் 18 வயது வரை ஆய்வுக்கு உட்படுத்திய 5000 குழந்தைகளில், 2000 பேர் மனவளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள்.
உறவுகளுக்குள் திருமணம், குழந்தை திருமணம், பிரசவத்தின் போது சிக்கல், மகப்பேறு காலத்தில் உரிய சிகிச்சையின்மை போன்ற அறியாமையால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பிறப்பது அதிகரித்து வருகிறது .இதுகுறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.