லக்கிம்பூர் கார் ஏற்றி கொலை சம்பவம் - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

samugam-killing-farmers
By Nandhini Oct 07, 2021 08:57 AM GMT
Report

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 3ம் தேதி காலை உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார்கள். அப்போது மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் அமைச்சரின் மகன் சென்ற வாகனம் விவசாயிகள் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பொதுமக்கள் 4 பேர் , பத்திரிகையாளர் ஒருவர் என 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. லக்கிம்பூருக்கு நேற்று இரவு சென்ற பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்தார்கள்.

இன்று இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹியா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், 16வது வழக்காக இன்றைக்கு பட்டியலிடப்பட்டது. இதனையடுத்து, லக்கிம்பூர் வன்முறை துரதிர்ஷ்டவசமாக நடைபெற்றது.

இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று உத்தரப்பிரதேச அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, யாரெல்லாம் குற்றவாளிகள்?, யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்திருக்கிறது. 

லக்கிம்பூர் கார் ஏற்றி கொலை சம்பவம் - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Samugam Killing Farmers