விவசாயிகள் கார் ஏற்றி கொலை - கடும் நெருக்கடியில் அமைச்சர் - அஜய் மிஸ்ராவை விசாரணைக்கு அழைக்க முடிவு
விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அமைச்சருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, சாலையில் நடந்து சென்ற விவசாயிகள் கூட்டத்தில், பாஜ.வினரின் கார் தாறுமாறாக ஓடி பலர் மீது மோதியது. இதில் 4 விவசாயிகள் பலியாயினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கி உள்ளது.
விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. அவர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள உபி அரசு, எதிர்க்கட்சி தலைவர்கள் யாரையும் நுழைய விடாமல் தடுத்து வருகிறது.
இதனிடையே காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அமைச்சருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அஜய் மிஸ்ராவை விசாரணைக்கு அழைக்க உத்தரப்பிரதேச போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.