கேரளாவை புரட்டி எடுத்த வெள்ளம் - மகனை கட்டியணைத்த படி உயிரிழந்த தாய் : கண்கலங்க வைக்கும் சம்பவம்!
கேரள மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெய்து வரும் கனமழையால், நிலச்சரிவு வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். நிலச்சரிவு காரணமாகவும், வெள்ள பாதிப்பு காரணமாகவும் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது.
அத்துடன் வெள்ள நீரில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் கேரளாவில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இடுக்கி மாவட்டம் கொக்காயர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் கட்டியணைத்தவாறு சடலங்களாக மீட்கப்பட்ட காட்சி பலரையும் கலங்கச் செய்துள்ளது. மீட்பு பணிக்கு சிறிது தூரத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என 3 சடலங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
இதில் தாய் தனது 10 வயது மகனை கட்டி அணைத்தவாறு சடலமாக மீட்கப்பட்டதுடன், தொட்டிலில் இறந்த நிலையில் குழந்தை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சியாத் - பவுசியா தம்பதியினர், கஞ்சிரப்பள்ளி பகுதியில் வசித்து வந்த நிலையில் உறவினர் திருமணத்திற்காக பவுசியா இடுக்கையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தது தெரியவந்தது.
இந்த நிலச்சரிவில் பவுசியா, அம்னா (7), அஃப்சான் (8), அஹியன் (4) மற்றும் அமீன் (10) ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள். அம்னா மற்றும் அமீன் இருவரும் சியாத் - பவுசியா குழந்தைகள், அஃப்சன் மற்றும் அஹியன் இருவரும் பவுசியாவின் சகோதரரின் பிள்ளைகள். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பவுசியா கணவர் சியாத் அழுது கொண்டிருந்தது இதயத்தை கனக்க செய்திருக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.