“நான்தான் ஜெயலலிதாவின் மகள்... என்னை எல்லாருக்கும் தெரியும்..”? - ஜெ.நினைவிடத்தில் பரபரப்பு
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், நான்தான் ஜெயலலிதாவின் மகள்... என்னை எல்லாருக்கும் தெரியும் என்று கூறிய பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதன் பிறகு, சிறிது காலம் ஓ.பி.எஸ். முதல்வராகவும், அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளியான நேற்று கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா எனும் பெண், ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர். அப்போது அவர், தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறினார்.
இது குறித்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தீபாவளியான இன்று எங்க அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தேன். ஆனால், என்னை உள்ளே விட மறுக்கிறார்கள். என்னுடைய சொந்த ஊர் மைசூர். இங்கு பல்லாவரத்தில் தங்கி உள்ளேன். என்னை எல்லாருக்கும் தெரியும்” என்றார்.
அவரிடம் ஒரு செய்தியாளர்கள், இவ்வளவு தினங்கள் இல்லாமல் ஏன் இப்போது இங்கு என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “அது சில காரணங்கள் இருக்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.