வெங்காயத்தினால் கருப்பு பூஞ்சை பரவுகிறதா? மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உண்டாகி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிறைய பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதேநேரத்தில் கொரோனா தொற்று ஏற்படாதவர்களுக்கு கூட கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த கருப்பு பூஞ்சை நோய் கொரோனா நோயாளிகளில் நீரிழிவு நோயாளிகளும், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் சாப்பிடுபவர்களை தாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கருப்பு பூஞ்சை மக்களிடையே ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் வெங்காயத்தின் மூலமாக பரவுகிறது என்று சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன.
வெங்காயத்தை உரிக்கும் போது, அதன் மேல் பகுதி கருப்பாக இருக்கும். இதுவும் ஒருவகை கருப்பு பூஞ்சை தான். இந்த கருப்பு பூஞ்சை மூலமாகவும் நமது உடலில் கருப்பு பூஞ்சை வைரஸ் பரவிவிடும் என்று தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ஆனால் மருத்துவர்கள் இவற்றை முற்றிலும் மறுத்துள்ளனர்.
இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது -
வெங்காயத்தின் மேல் இருக்கும் கருப்பு பூஞ்சை, பூமிக்கு அடியில் காணப்படும் பூஞ்சை தான். இந்த பூஞ்சை அஸ்பெர்கிலஸ் நைகர் எனப்படும். மேலும் இதற்கும் தற்போதைய கருப்பு பூஞ்சைக்கும் தொடர்புபடுத்தி மக்கள் பயப்பட வேண்டாம். தயவு செய்து போலி செய்திகளை பரப்ப வேண்டாம். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.