சர்ச்சைப் பேச்சு - பாபா ராம்தேவை தப்ப வைத்த மத்திய அமைச்சர்!
பாரம்பரிய மருத்துவத்தையும், யோகாவையும் முன்னிறுத்தி அறிவியல் சார்ந்த அலோபதி மருத்துவத்தைத் தொடர்ச்சியாக இழிவுப்படுத்தி பேசி வருகிறார் பாபா ராம்தேவ்.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசுகையில், அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல். லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால்தான் இறந்துள்ளனர். ரெம்டெசிவிர், ஃபேபிஃப்ளூ உள்ளிட்ட மற்ற மருந்துகள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டாலும் கொரோனாவை குணப்படுத்த முடியவில்லை என்று கூறினார்.
பாபா ராம்தேவ்வின் பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியது. இவரின் பேச்சுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) வன்மையாக கண்டனத்தை தெரிவித்தது. அதனையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாபா ராம்தேவ் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரவும் ஐ.எம்.ஏ நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பாபாவைக் கைது செய்ய வேண்டும் எனவும் கண்டனங்கள் வலுத்தன.
இது குறித்து பாபா ராம்தேவ் தரப்பில் தெரிவிக்கையில், வாட்ஸ்அப்பில் வந்த தகவலைத் தான் நிகழ்ச்சியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாபா ராம்தேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். பாபா ராம்தேவ், கருத்துக்களைத் திரும்பப் பெற கேட்டுக்கொண்டார்.
बाबा @yogrishiramdev जी ने एलोपैथिक चिकित्सा पर अपना बयान वापस लेकर जिस तरह पूरे मामले को विराम दिया है, वह
— Dr Harsh Vardhan (@drharshvardhan) May 23, 2021
स्वागतयोग्य व उनकी परिपक्वता का परिचायक है।
हमें पूरी दुनिया को दिखाना है कि भारत के लोगों ने किस प्रकार डट कर #COVID19 का सामना किया है। नि:संदेह हमारी जीत निश्चित है ! https://t.co/0XVXULVrH0
அந்தக் கடிதத்தில், மக்களால் பெரிதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மனிதாரகிய நீங்கள் கூறும் கருத்து பெரிதும் மதிக்கப்படும். களப்பணியில் உலகம் முழுவதும் தீவிரமாக ஈடுபட்டுள்ள கொரோனா போர் வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உங்களின் அவதூறான, துரதிர்ஷ்டமான கருத்துக்களை திரும்பப் பெறுவீர்கள் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பாபா ராம்தேவ், தனது டுவிட்டர் பக்கத்தில், “சுகாதாரத்துறை அமைச்சரே உங்கள் கடிதம் கிடைத்தது. நான் என்னுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.