பெற்ற மகளிடம் அத்துமீற கணவனை சுத்தியால் கொன்ற மனைவியை வழக்கிலிருந்து விடுவிப்பு
சென்னையில் பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற கணவனை, மனைவியே சுத்தியால் அடித்துக் கொலை செய்ததாக கைதான நிலையில், தற்காப்புக்காக கொலை நடந்ததாகக்கூறி காவல்துறையினர் அப்பெண்ணை விடுதலை செய்துள்ளனர்.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 43 வயது நபர், மது போதையில் தனது 20 வயது மகளிடம் புதன்கிழமை இரவு பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சி செய்துள்ளார்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி, தன் கணவனை கண்டித்திருக்கிறார். அதனையும் மீறி பெண்ணிடம் அத்து மீற முயற்சி செய்த கணவனிடமிருந்து, மகளை காப்பாற்ற ஒரு கட்டத்தில் கணவனை சுத்தியால் அடித்து தாக்கினார். இதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து அந்தப்பெண் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவனை கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டார்.
இச்சூழலில் தற்காப்புக்காகவும், மகளின் பாதுகாப்புக்காகவும், கணவனை தாக்கியதாகவும், அதில் இறந்துவிட்டதாகவும் மனைவி போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் கைது செய்த பெண்ணை விடுவித்திருக்கிறார்கள். திருவள்ளூர் எஸ்பியாக அரவிந்தன் ஐபிஎஸ் இருந்தபோது இதேபோன்றதொரு கொலை சம்பவத்தில் கொலை செய்த பெண்ணை கைது செய்யாமல் விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.