யார் இந்த பிபின் ராவத்? இவரின் பொறுப்பு என்ன?
இந்தியாவுக்கு தனியாக முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்படும், இது நமது படைகளை சிறப்பாக செயலாற்ற வைக்கும் என பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிப்பு வெளியான சில நாளிலேயே இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக பொற்றுப்பேற்றவர்தான் பிபின் ராவத்.
இவர் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். உத்தரகண்ட்டை சேர்ந்த இவர் ராஜ்புத் வம்சாவளியில் பிறந்தவர். சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியிலும் பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தவர்.
தமிழகத்தில் உள்ள வெலிங்டனில் பாதுகாப்பு பிரிவு உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கேற்றுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ள பிபின்ராவத், சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் எம்.பிலும், மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பையும் பெற்றிருக்கிறார். ராணுவ போர்த்திறன் குறித்த தனது ஆய்வுக்காக, கடந்த 2011-ம் ஆண்டு, மீரட்டிலுள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பிபின் ராவத் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் அவரது தந்தை பணியாற்றிய படையான கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்த பிபின் ராவத், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமைஅதிகாரி உட்பட அனைத்து வீரர்களுகும் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் வகித்துள்ளார்.
2016-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31-ம் தேதியன்று, இந்திய ராணுவத்தின் 27-வது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத். தலைமைத் தளபதியாகப் பதவியேற்பதற்கு முன்பு, துணை தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வந்தார்.
இந்தியத் தரைப்படையின் 27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றிய பிபின்ராவத்தை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமைப் தளபதியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.
இந்தியப் முப்படைகளின் தலைமை தளபதியாக கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி பதவி ஏற்றார் பிபின் ராவத் என்பது குறிப்பிடத்தக்கது.