குரூப் கேப்டன் வருண் எழுதிய கடிதம் - இன்றைய இளம் தலைமுறையினருக்கு 'பாடம்'
குன்னுார் இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த, குரூப் கேப்டன் வருண், கடந்த ஆண்டு குடியரசு தினத்தில், 'சவுரிய சக்ரா' விருது பெற்றார்.
இதனையடுத்து, தன் பள்ளி முதல்வருக்கு உருக்கமாக அவர் கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் இளம் தலைமுறையினருக்கு பாடமாக அமைந்திருக்கிறது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி குரூப் கேப்டன் வருண் சிங். நஞ்சப்பா சத்திரம் பகுதியில் நடந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்து, பெங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். இவர், கடந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி இலகுரக போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்தபோது, சமயோசித முயற்சியால் தரை இறக்கினார்.
இந்த வீரதீர செயலுக்கு, 'சவுரிய சக்ரா' விருது இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டார். இந்த உயரிய விருது கிடைத்ததும், தான் படித்த ஹரியானா மாநிலம் சண்டிமந்திர் ஆர்மி பப்ளிக் பள்ளி முதல்வருக்கு வருண் கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்தக் கடித்தில் உள்ள விபரங்கள் -
என் வாழ்க்கை அனுபவங்களின் எண்ணங்கள், எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எல்லோரும் பள்ளியில் சிறந்து விளங்க மாட்டார்கள்.
ஆனால், யாரும் சாதாரணமானவர் என, நினைக்க வேண்டாம். எந்த வேலை செய்தாலும் அர்ப்பணிப்புடன் இருங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். நான் சாதாரணமானவனாகவே இருந்தேன்.
இன்று என் வாழ்க்கையில் கடினமான மைல் கற்களை எட்டி உள்ளேன். நான் என் ஆசிரியர்களை மிக உயர்ந்த மதிப்பில் வைத்துள்ளேன். என் வாழ்விலும், வேலையிலும் உயர்ந்து இருக்கிறேன் என்பதற்கு அவர்களுக்கு நன்றி.
இவ்வாறு, அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.
தன் வாழ்வின் சிறந்த தருணத்தில், அவர் படித்த பள்ளி மற்றும் ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தது, இளம் தலைமுறையினருக்கு இக்கடிதம் ஓர் பாடமாக அமைந்துள்ளது.