தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய ஹெலிகாப்டரில் பறந்து வந்த மகன் - வியப்படைந்த மக்கள்

helicopter Funeral The son who flew Surprised people
By Nandhini Dec 02, 2021 05:38 AM GMT
Report

தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக மகன் ஒருவர் பெங்களூரிலிருந்து ரூ.5 லட்சத்தில் வாடகை தனி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு பறந்து வந்த நிகழ்வு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் முன்னாள் ஊராட்சித் தலைவர். இவரது மகன் சசிகுமார். திருப்பூரில் தனியார் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தனது கம்பெனி வேலை தொடர்பாக சவுதி அரேபியாவுக்கு சசிகுமார் சென்றிருந்தார். தந்தை இறந்து விட்டதாக உறவினர்கள் சசிகுமாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார் சசிகுமார்.

இதனையடுத்து, பெங்களூரிலிருந்து சுமார் ரூ.5 லட்சம் வாடகை கொடுத்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்கினார். பின்னர், அங்கிருந்து தென்னங்குடிக்கு காரில் சென்று தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், மாலை புதுக்கோட்டையிலிருந்து பெங்களூர் திரும்புவதற்கு ஹெலிகாப்டர் தயாரான நிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதையடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பகலில் அந்த ஹெலிகாப்டர் புறப்படும் என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திடீரென ஹெலிகாப்டரில் சசிகுமார் வந்து இறங்கியதால், இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தந்தைக்கு இறுதி காரியங்கள் செய்வதற்காக மகன் ஹெலிகாப்டரில் வந்த நிகழ்வு மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய ஹெலிகாப்டரில் பறந்து வந்த மகன் - வியப்படைந்த மக்கள் | Samugam Funeral Helicopter