சீனாவின் கைவரிசை? - திடீரென கறுப்பாக மாறிய ஆறு - ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன - மக்கள் அதிர்ச்சி
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கமாங்க் ஆற்றின் நீர் திடீரென கறுப்பாக மாறியது. இதனால், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கட்டட கழிவுகளை சீனா அதிகளவில் ஆற்றில் கொட்டியதால் தான், நீர் கறுப்பாக மாறியதாக தற்போது புகார் எழுந்திருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் பிரதான நதிகளின் ஒன்றான கமாங்க் ஆற்று நீர், நேற்று காலை திடீரென கறுப்பாக காட்சியளித்தது. கிழக்கு கமாங்க் மாவட்ட பகுதியில் தான் ஆற்று நீர் கறுப்பாக மாறியிருந்தது.
மேலும், அந்த ஆற்று நீரில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்திருந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆற்று நீரை சோதனை செய்தார்கள்.
ஆற்று நீரில் அதிகளவில் கழிவுப் பொருட்கள் கலந்ததால் நீர் மாசடைந்ததாகவும், இதனால் மீன்கள் இறந்ததாக சோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 'கமாங்க் ஆற்று மீனை யாரும் சாப்பிட வேண்டாம்' என்று மக்களிடம் அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து, நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கமாங்க் ஆற்றின் கரையை ஒட்டி சீன எல்லை அமைந்திருக்கிறது. தங்கள் பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள சீனா, கட்டுமான கழிவுகளை கமாங்க் ஆற்றில் கொட்டியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. கமாங்க் ஆற்று நீர் மாசடைந்ததற்கு இது தான் முக்கிய காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முழுமையாக விசாரித்தால் உண்மை தெரியும் என்றார்.