சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்தில் 7 பேர் பலி - உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் கடையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடையின் உரிமையாளர் செல்வகணபதி மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அரசு அனுமதியை மீறி அதிக அளவிலான பட்டாசுகளை வைத்தது விபத்திற்கு முக்கிய காரணம் என்றும், மரணம் ஏற்படும் என தெரிந்தே அலட்சியமாக இருந்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், செல்வகணபதியும் இந்த தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.