பாஜக எம்.பி.யின் காரை அடித்து நொறுக்கிய விவசாயிகள் - ஹரியானாவில் பதற்றம்
ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ஹிசார் மாவட்டத்தில் பாஜக ராஜ்யசபா எம்.பி., ராம் சந்தர் ஜங்ராவின் கார் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மசாலாவில் அடிக்கல் நாட்டுவதற்காக ஹிசாரின் நார்னவுண்ட் நகரத்திற்கு ஜங்ரா வந்தார். அவர் வருவதை அறிந்த மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கு திரண்டு அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
போராட்டக்காரர்களின் நடமாட்டத்தை தடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, அங்கு தடுப்புகளை போலீசார் நிறுவினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்பை மீறி எம்பியின் காரை தாக்கி, காரின் கண்ணாடிகளை உடைத்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது காரில் அமர்ந்திருந்த ஜாங்ரா, “தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக” கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காரை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டி இருக்கிறார். "பாஜக குண்டர்கள்" தங்களை தாக்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இதன் விளைவாக ஒரு போராட்டக்காரர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து டிஎஸ்பி ஜுகல் கிஷோர் ராம் கூறுகையில், “போலீஸ் தடியடி எதுவும் நடத்தவில்லை. அவர் (ராணா) தெருவில் விழுந்ததில் காயம் அடைந்தார். எம்.பி. ஒருவரின் காரின் கண்ணாடியை உடைத்ததற்காக 2 விவசாயிகளை நாங்கள் கைது செய்துள்ளோம். சிகிச்சை பெற்று வரும் விவசாயியின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் கிடையாது என்றார்.
இந்நிலையில், தலையில் ஏற்பட்ட உள் காயம் காரணமாக விவசாயி சுயநினைவை இழந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.