“துர்நாற்றம் வீசுகிறது... முதல்ல நீ கீழ இறங்கு...”- பேருந்து நடத்துனரால் கண்கலங்கிய மூதாட்டி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் முதிர்ந்த மூதாட்டியான இவர், மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
வழக்கம்போல் செல்வம் நேற்று மாலை மீன்களை விற்பனை செய்துவிட்டு இரவு குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். செல்வத்தை கண்ட பேருந்து நடத்துநர் அவர் மீது துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், பேருந்தில் பயணிக்க முடியாது, முதலில் கீழே இறங்கு என்று கூறி பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கி விட்டிருக்கிறார். இதனால், கோபமடைந்த மூதாட்டி பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகம் சென்றார்.
"இது என்ன நியாயம், பேருந்தில் ஏறிய என்னை எப்படி இறக்கி விடலாம்? பெட்டிசன் கொடுப்பேன்" என கத்தி கூச்சலிட்டார். அதோடு தனது ஆதங்கத்தை அங்கு நின்ற பொதுமக்களிடம் கொட்டித் தீர்த்து அழுதார். தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.