ராணிப்பேட்டையில் திமுக - அதிமுக பிரமுகர்கள் கடும் வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு!
இன்று தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், எந்த விதமான அசம்பாதவிதமும் இல்லாமல் நடந்து வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேநேரம் ராணிப்பேட்டை சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி மைய வளாகத்தில் திமுக - அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். ராணிப்பேட்டையில் முதற்கட்டமாக வாலஜாபாபேட்டை, ஆற்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் தேர்தல் நடந்து வருகிறது.
இதில் ராணிப்பேட்டையிலுள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் திமுகவினர் வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்கு சேகரிப்பதாக கூறி அதிமுகவினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சிப்காட் பகுதியை சுற்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். இந்த வாக்குச்சாவடி மையத்தில், தேர்தல் நடைபெறும் இடத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குட்பட்டே திமுக பிரசார நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இருந்தும் ஆட்சியர் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனக்கூறி, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். கடும் வாக்குவாதத்தை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை விலக்கி அனுப்பினர். பின்னர், அங்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது.