‘சென்னை அணி வெற்றி பெற வேண்டும்...’ - 12 அடி உயரத்தில் ரங்கோலியில் தோனியின் உருவம் வரைந்த பட்டதாரி பெண்
ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்று ரங்கோலி கோலத்தில் தோனியின் உருவ பொம்மையை வரைந்து பட்டதாரி பெண் அசத்தி இருக்கிறார்.
ஐ.பி.எல்.போட்டியின் இறுதி போட்டியில் சென்னை அணி கோப்பை வெல்வதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த ஓவிய பட்டதாரி பெண் ஒருவர் டோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்திருக்கிறார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ஓவிய பட்டதாரி பெண் அறிவழகி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோனியின் தீவிர ரசிகை ஆவார்.
இவர் தற்போது ஐ.பி.எல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்திருக்கிறார்.
12 அடி உயரம் 12 அடி அகலத்தில் 7 கிலோ கோலப்பொடியை வைத்து 2 நாட்களில் இந்த ரங்கோலியை வரைந்திருக்கிறார். அறிவழகியின் இந்த ரங்கோலியை பலரும் பாராட்டி வருகிறார்கள். இவர் இதற்கு முன்பு தேசத் தலைவர்களின் பிறந்தநாள்களில் அவர்களது உருவத்தை ரங்கோலியாக வரைந்து மரியாதை செலுத்தியுள்ளார்.