'எனது கனவு நிறைவேறியது' : இஸ்லாமிய பெண் அர்பணித்த கிருஷ்ணர் ஓவியம் - குவியும் வாழ்த்துக்கள்
கேரளா, கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஜஸ்னா சலீம் (28). இஸ்லாமிய பெண்மணியான இவர் சில வருடங்களுக்கு முன்பு அழகிய கிருஷ்ணா ஓவியங்கள் வரைந்து மிகவும் பிரபலமானார்.
இவருக்கு பகவான் கிருஷ்ணரின் ஓவியங்களை தீட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். கடந்த 6 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை தீட்டி இருக்கிறார். இருப்பினும், அவரது நீண்ட கால கனவு இப்போது தான் நிறைவேறி இருக்கிறது.
இறுதியாக, கோவிலில் அவரது கிருஷ்ணர் ஓவியத்தை சமர்ப்பிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர் வரைந்த வெண்ணெய் பானையுடன் அமர்ந்திருக்கும் குழந்தை கிருஷ்ணரின் ஓவியம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனையடுத்து, பந்தளத்திலுள்ள உலந்து ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலை சேர்ந்த ஒரு பக்தர் குழு தொடர்பு கொண்டு. ஞாயிற்றுக்கிழமை, பத்தனம்திட்டா மாவட்டத்தின் பந்தளம் அருகே உள்ள உலந்து கிராமத்தில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோவிலில் அவர் தனது ஓவியத்தை அர்ப்பணித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், கிருஷ்ண அரை தரிப்பதும், என் ஓவியத்தை பகவானிடம் சமர்பிப்பதும் எனது நீண்ட கால கனவுவாக இருந்து வந்தது. பந்தளத்தில் உள்ள உலந்து ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில், எனது விருப்பம் நிறைவேறியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே கிடையாது.
கோவில் அதிகாரிகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கர்ப்பமாக இருந்த காலத்தில் விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பிற்கு பிறகு குணமடைந்து கொண்டிருந்த போது தற்செயலாக, பொழுது போக்கிற்காக வரையத் தொடங்கினேன். என் குழந்தை பருவத்தில் என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை கண்ணா என்று அழைப்பார்கள்.
நான் ஒரு முறை செய்தித்தாளில் குழந்தை வடிவத்திலான பகவான் கிருஷ்ணரை பார்த்த பிறகு, அவர் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டு வரையத்தொடங்கினேன். ஓவியம் மிக நன்றாக வந்திருந்தது. தன் பகவான் கிருஷ்ணரின் ஓவியத்தை வரைய தொடங்கிய காலத்தில், நான் எனது ஓவியங்களில் ஒன்றை தனது இந்து நண்பருக்கு பரிசளித்தேன்.
அவர் அதை பூஜை அறையில் வைத்திருந்த நிலையில், வீட்டில், சாதகமான வகையில் நல்ல மாற்றங்கள் நிகழத் தொடங்கின என்றார். ஜஸ்னா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கிருஷ்ண பகவான் ஓவியத்தை பரிசளிக்க வேண்டும் என்று விரும்புகிறார். 2 குழந்தைகளின் தாயான ஜஸ்னா, ஓவியம் வரைய பயிற்சி ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தனிச்சிறப்பு.