‘கொரோனா யாரையும் விட்டுவைக்காது’ - குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த டாக்டர் பிணமாக மீட்பு

doctor samugam- corpse recovery
By Nandhini Dec 14, 2021 04:56 AM GMT
Report

‘கொரோனா யாரையும் விட்டுவைக்காது’ என்று குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த டாக்டர் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுஷில் சிங் (வயது 55). இவர் கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சந்திரபிரபா (வயது 50). இவர்களுக்கு மகன் ஷிகார் சிங் (வயது 21) என்ற மகனும், மகள் குஷி சிங் (வயது 16) என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சுஷில் சிங், ‘டீ’ யில் மயக்க மருந்து கொடுத்து மனைவி சந்திரபிரபாவை சுத்தியலால் அடித்தும், மகன் ஷிகார் சிங், மகள் குஷி சிங் ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்தார்.

இந்தக் கொலை சம்பந்தமாக சுஷில் சிங் எழுதிய கடிதத்தத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.

அந்த கடிதத்தில், தான் குணப்படுத்தமுடியாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், ‘கொரோனா யாரையும் விட்டுவைக்காது.எனது குடும்பத்தை பிரச்சினையில் விட்டுவிட்டு செல்ல விரும்பவில்லை. அவர்களை விடுதலை செய்து பிரச்சினைகளிலிருந்து வெளியேற்ற விரும்புகிறேன்’ என்று எழுதியிருந்தார். குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த சுஷில் சிங், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுஷிலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில் சுஷில் சிங் பிணமாக மீட்கப்பட்டிருக்கிறது. சித்நாத் ஹட் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அழுகிய நிலையில் பிணம் கிடப்பதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் சிலர் கண்டுபிடித்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றினார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கபட்ட நபர் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய டாக்டர் சுஷில் சிங் என்பது தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைந்திருப்பதால் சுஷில் சிங்கின் ஆதார் அட்டை, செல்போன், டிரைவிங் லைசன்ஸ் உள்பட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.