மின்னல் தாக்கி இடிந்து விழுந்த சுவர் - தாய், மகன் பரிதாப பலி - சோகத்தில் மூழ்கிய கிராமம்
மின்னல் தாக்கி இடிந்து விழுந்த சுவரால், 20 நாட்களில் திருமணம் நடக்க இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மற்றும் ஆறுமுகம். இவர்களின் வீடு அடுத்துடுத்து உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவில் ஜெயங்கொண்டத்தில் கனமழை பெய்தது.
அப்போது, மாடியில் வசிக்கும் சுப்ரமணி வீட்டின் தண்ணீர் தொட்டியில் மின்னல் தாக்கி சுவர் இடிந்தது. அந்தச் சுவர், ஆறுமுகம் ஓட்டு வீட்டின் மேலே விழுந்தது. இதனால் ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்தின் அம்மா லெட்சுமி (85), 3வது மகன் அஜித் குமார் (25) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பயங்கர சத்தத்துடன் விழுந்ததால் அக்கம் பக்கத்து வீட்டினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் உயிரிழந்த அஜித்குமார் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இன்னும் 20 நாட்களில் அஜித்குமாருக்கு திருமணம் ஆக இருந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.