தடையை மீறி ஆற்றில் இறங்கி செல்பி எடுத்த வாலிபர் - தோழிகள் கண் எதிரே உயிரிழந்தார்

samugam-death
By Nandhini Dec 07, 2021 09:55 AM GMT
Report

கொடிவேரி அணையில் தடையை மீறி குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் ரகு (21). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரகு தனது பெண் தோழிகள் 2 பேருடன் ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கொடிவேரி அணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது, கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. அது அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதையும் மீறி கொடிவேரி பாலத்தின் கீழ் பகுதியில் குளிப்பதற்காக ரகு ஆற்றில் இறங்கினார்.

அப்போது, ரகு தண்ணீரில் நின்றபடி செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் எதிர்பாராத விதமாக மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதைப் பார்த்த அவருடைய 2 பெண் தோழிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இத்தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையினரும், தீயணைப்புத்துறை வீரர்களும் சுமார் 1 மணி நேர போராடி ரகுவின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டனர். இதனைத்தொடர்ந்து ரகுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொடிவேரி அணையில் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி குளிக்க சென்ற வாலிபர் செல்பி எடுக்க முயற்சி செய்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

தடையை மீறி ஆற்றில் இறங்கி செல்பி எடுத்த வாலிபர் - தோழிகள் கண் எதிரே உயிரிழந்தார் | Samugam Death