பஜ்ஜி சாப்பிட்ட தாய்-மகன் திடீர் மரணம் - சோகத்தில் கிராம மக்கள்
பெலகாவி மாவட்டம் ஹீதளி கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி (55). இவரது மகன் சோமலிங்கப்பா (28). இவர்கள் இருவரும் விவசாயம் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அன்று மாலையில் வேலையை முடித்து விட்டு இருவரும் வீட்டுக்கு சென்றனர். பின்பு வீட்டில் பார்வதி பஜ்ஜி செய்தார். அதை தாய், மகன் இருவரும் சாப்பிட்டனர். ஆனால், பஜ்ஜி சாப்பிட்ட சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெலகாவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து மரியாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே இவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பஜ்ஜி சாப்பிட்ட தாய்-மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.