திமுகவின் வீரபாண்டி ராஜா மாரடைப்பால் காலமானார் - பிறந்த நாளன்று உயிர் பிரிந்தது
திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வீரபாண்டி ஆ.ராஜா மாரடைப்பால் காலமானார்.
திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜா. இவர் தனது பிறந்த நாளையொட்டி தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பூலாவரியில் தனது இல்லத்தில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாட இருந்தார். இதையடுத்து தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தொண்டர்களை சந்திக்க அவர் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பிறந்த நாளன்றே அவர் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.