‘ஒமைக்ரான்’ யாரையும் விட்டு வைக்காது... கொரோனா பயத்தால் மனைவி, பிள்ளைகளை கொலை செய்த பேராசிரியர்
ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி அனைவரையும் கொன்றுவிடும் என்ற பயத்தில் ஓர் ப்ரோபஸர் தன் குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுஷில் சிங் (55). இவர் கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சந்திரபிரபா என்ற மனைவி உள்ளார். ஷிகார் சிங் (21) என்ற மகனும், குஷி சிங் (16) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், பேராசிரியர் சுஷில் சிங் புதிதாக பரவும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் குறித்து பீதியில் இருந்து வந்துள்ளார். இதனால், அந்த வைரஸ் நாம் அனைவரையும் கொன்று விடும் என்று எல்லோரிடமும் கூறி வந்துள்ளார்.
அதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டிலிருந்த மனைவி மற்றும் பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கிறார். இதனையடுத்து, தனது செல்போன் மூலம், தனது சகோதரருக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அந்த மெசேஜில், ‘புது கொரானா பரவி எல்லோரையும் கொல்வதற்கு முன்பு தானே என் குடும்பத்தினரை கொலை செய்து விட்டேன்’ என்று அனுப்பி இருந்தார்.
இதனையடுத்து, அவருடைய சகோதரர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டை திறந்து பார்த்தனர்.
அப்போது அந்த வீட்டில் இறந்து கிடந்த அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தலைமறைவாகி உள்ள பேராசியரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.