சாப்பிடாத சமோசாவுக்கு பில் - ஓட்டல் உரிமையாளரை துடிதுடிக்க அடித்துக் கொன்ற வாலிபர்
சாப்பிடாத சமோசாவுக்கு பில் எழுதிக் கொடுத்ததால் ஓட்டல் உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், கே.புதூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி முன்பாக ஓட்டல் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டலை முத்துக்குமார் என்பவர் நடத்தி வந்தார்.
இந்நிலையில், இந்த ஓட்டலில் கண்ணன் என்பவர் சாப்பிட வந்தார். அப்போது, அவர் இட்லி சாப்பிட்டு முடித்தார். அப்போது, அந்த ஹோட்டல் ஊழியர் பில்லை கண்ணனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, பில்லில் இட்லியுடன் சேர்த்து சமோசாவுக்கான தொகையும் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணன், ஓட்டல் உரிமையாளர் முத்துக்குமாரிடம் சென்று, நான் இட்லி மட்டும் தான் சாப்பிட்டேன். சமோசா சாப்பிடவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு முத்துக்குமார், நீங்கள் சமோசா சாப்பிட்டு இருப்பீர்கள். அதனால் தான் பில் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதனால், இவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகமானது. இந்த வாக்குவாதத்தில் ஆவேசமடைந்த கண்ணன், ஓட்டலில் இருந்த விறகு கட்டையை எடுத்து முத்துக்குமாரை சரமாரியாக அடித்து உதைத்தார். இந்தத் தாக்குதலில் முத்துகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். முத்துகுமார் உயிரிழந்ததும், கண்ணன் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹோட்டல் உரிமையாளர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பிறகு, தலைமறைவாக இருந்த கண்ணனை தீவிரமாக தேடி வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
சாப்பிடாத சமோசாவுக்கு பில்லு கொடுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு சமோசாவுக்கு ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.