ஆந்திராவில் சிகாமணியின் கொரோனா லேகியம் வாங்க முண்டியடித்த கூட்டத்தால் பரபரப்பு!
ஆந்திராவில் உயிர் காக்கும் கொரோனா லேகியம் வாங்குவதற்காக 40 ஆயிரம் பேர் திரண்டு வந்து முண்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் முத்துகூறு கிராமம் உள்ளது. இங்கு சித்த மருத்துவர் சிகாமணி சித்தமருந்து தயாரித்து வருகிறார். இந்த லேகியத்தால் கொரோனா குணமாகுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொரோனாவிலிருந்து உயிர் காக்கும் சிகாமணியின் சித்த மருத்துவ லேகியம் 3 ஆயிரம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக வாட்ஸ் ஆப்பில் தகவல் வந்துள்ளது. இந்த தகவலை நம்பி முத்துகூறு கிராமத்திற்கு சுமார் 40 ஆயிரம் பேர் படையெடுத்து திரண்டு வந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் மக்கள் கூட்டத்தைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். கூட்டத்தை உள்ளூர் இளைஞர்கள் கொண்டு ஒழுங்குப்படுத்தினர்.
இந்த சித்த மருந்து கொரோனாவிலிருந்து குணப்படுத்த நல்ல பலன் அளிப்பதாக கூறுவதை ஆய்வு செய்து அனுமதி தருமாறு ஆயுஷ் அமைச்சகத்திற்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளதால் இந்த மருந்து மீது புது நம்பிக்கை உள்ளது அப்பகுதி மக்களுக்கு. அதனால், லேகியம் வாங்குவதற்காக கொளுத்தும் வெயில் கூட பார்க்காமல் கூட்டம் அலைமோதியது.
சிலர் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் நின்றுக்கொண்டிருந்ததால், மயங்கி கீழே சரிந்தனர். நேரம் ஆக, ஆக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மக்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனா தொற்று அதிகளவில் பரவ காரணமாக அமைந்து விடும் என்பதற்காக, சம்பந்தப்பட்ட சித்தமருந்து விநியோகத்திற்கு தடை விதித்தார்.
இதனையடுத்து, மருந்து வாங்க வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.