‘ஜெய் பீம்’ மாதிரி அதிகாரம் முழுவதும் மோசமானது கிடையாது - படத்தை பாராட்டி கரூர் ஆட்சியரின் நெகிழ்ச்சி பதிவு

samugam-cinema
By Nandhini Nov 07, 2021 06:52 AM GMT
Report

ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றுள்ளது போல் அதிகாரம் முழுவதும் மோசமானது கிடையாது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் படத்தை பாராட்டி கருத்து  தெரிவித்திருக்கிறார். 

த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ஆன்லைனில் வெளியாகி உள்ள படம் ஜெய்பீம். இப்படத்தில் பூர்வகுடி மக்கள் மீது அதிகாரம் எந்தளவிற்கு மோசமாக நடந்து கொள்கிறது என்றும், அதற்கு நீதி கிடைக்க சட்டம் எந்தளவிற்கு உதவி செய்கிறது என்று படத்தில் மிகவும் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

இப்படம் குறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் டி.குணாலன் முக்கியத் தகவலை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது - 

இருளரும் இந்திய ஆட்சிப் பணியும் - அதிகாரத்துவத்தின் 'ஜெய் பீம்' முழக்கம்! சூர்யா நடிப்பில் 'ஜெய்பீம்' திரைப்படம், நம் சமூகமும் அதிகாரத்துவமும் இந்த மண்ணின் பூர்வக்குடி மக்களுக்கு இழைக்கும் அநீதி குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளது. அதை கண்டிப்பாக மறுக்க இயலாது. அதிகாரத்துவம் முற்றிலும் மோசமானதல்ல, இந்நிலையை மாற்ற தொடர்ந்து முயன்று வருகிறது என்பதை பதிவு செய்வது அவசியமாகிறது.

அதற்கு சான்றாக இருளர் மக்களுடனான எனது அனுபவங்களை பகிர விழைகிறேன். இது கண்டிப்பாக தற்பெருமை பறைசாற்றும் பதிவு அல்ல. இது அதிகாரத்துவத்தின் 'ஜெய்பீம்' முழக்கமாகும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தமிழ்நாட்டில் நான் முதன்முதலில் சார் ஆட்சியராக திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கோட்டத்தில்1.5 ஆண்டுகளும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டத்தில் 5 மாதங்களும் பணியாற்றினேன். இவ்விரு பகுதிகளிலும் இருளர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இருளருக்கு ஏற்படுத்தியுள்ள சமூக நீதியை நிலைநாட்ட ST சமூகச் சான்று அவசியமானதாகும். அதை வழங்கும் அதிகாரியாக நாங்கள் ஒவ்வொரு இருப்பிடமாக சென்று செய்யாரில் 3000 பேருக்கும் திண்டிவனத்தில் 2300 பேருக்கும் வருவாய்த்துறையால் ST சான்று வழங்கப்பட்டது. இருளர் அதிகளவில் கொத்தடிமைகளாக செங்கள்சூலைகளிலும் மரம் வெட்டுவதற்கும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

எனது பணிக்காலத்தில் 25 நபர்களை விடுவித்துள்ளேன். எனினும் போதிய அடிப்படை வசதிகளும், அரசுநலத்திட்ட உதவிகளும் சரிவர கிடைக்காததால் மீண்டும் அதே தொழிலிற்கு திரும்பும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வுகாணும் நோக்கில் வந்தவாசி அருகிலுள்ள மீசனல்லூர் கிராமத்தில் 'அப்துல்கலாம்புரம்' என்று இருளர்களுக்கான Smart Colony-பசுமை வீடுகள்,சாலைகள்,மழைநீர் வடிகால்,குடிநீர், சமுதாய கூடம்,குழந்தைகள் மையம், சிறுவர் பூங்கா, பால் பண்ணை, செங்கல் சூளை ஆகியவற்றை கொண்டு உருவாக்கினோம். நான் பணியில் சேர்ந்த இரண்டாம் நாளான 3.12.2015 அன்றே இத்திட்டத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.

அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் பெருமளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அன்று நான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு நிவாரண மையத்தில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கிருந்த இருளர் மக்கள் கேட்டுக்கொண்டதால் அவர்களின் குடிசைகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.

ஏரிக்கரையில் உள்ளதால் அவர்களின் குடிசைகள் நீரில் முழுவதுமாக மூழ்கியிருந்தன. அவர்கள் தங்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை மட்டும் வழங்க கோரினர். அவர்களின் நிலைமை என்னை மிகவும் உலுக்கியது.

அங்கிருந்த இருளர் மக்கள் கேட்டுக்கொண்டதால் அவர்களின் குடிசைகளை நேரில் சென்று பார்வையிட்டேன். ஏரிக்கரையில் உள்ளதால் அவர்களின் குடிசைகள் நீரில் முழுவதுமாக மூழ்கியிருந்தன.அவர்கள் தங்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை மட்டும் வழங்க கோரினர்.

அவர்களின் நிலைமை என்னை மிகவும் உலுக்கியது. இருப்பினும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நான் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை ஒன்றிணைத்து குழு அமைத்தேன். அவர்களின் பணிச்சுமை அதிகரிக்காத வகையில் அவர்களின் தினசரி பணியுடன் இந்த திட்டம் இணைக்கப்பட்டது.

மீசநல்லூர் கிராமத்தில் உள்ள 10 ஏக்கர் பரப்பளவில் ஒரு கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் தீர்வை ஏற்படாத தரிசு நிலமாக வகைமாற்றம் செய்யப்பட்டு முதல்கட்டமாக 43 இருளர் குடும்பங்களுக்கு தலா 2.75 சென்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. திட்டத்திற்கான நிதியை பெற நானே பல முயற்சிகளை மேற்கொண்டேன்.

ஒன்றிய அரசின் பழங்குடி நலத்துறையின் PVTG திட்டத்தில் 1.59 கோடி ரூபாய் நிதி கோரி நேரடியாக விண்ணப்பித்தேன். திட்டம் குறித்து துறையின் இணைச்செயலருடன் நேரில் விவரித்து திட்ட அனுமதி குழுவின் அனுமதியை 2 மாதங்களில் பெற்றேன்.

நகர்ப்புறங்களில் உள்ள Gated Communities போன்றே இந்த இருளர் ஸ்மார்ட் காலனி, QUN Designs என்ற நிறுவனத்தால் இலவசமாக வடிவமைக்கப்பட்டது. தலா 2.5 லட்சம் ரூபாய் செலவில் சூரிய சக்தி பொருந்திய தனி வீடுகள் கட்டப்பட்டன. மேலும் SBM திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டன.

இருளர் நலன் குறித்து நான் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வலியுறுத்தினேன். அதன் விளைவாக கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வுக்கான மாநில செயல்திட்டத்தில் மீசனல்லூர் திட்டம் முன்மாதிரியாக சேர்க்கப்பட்டது.

நாடு முழுவதும் பல்வேறு அதிகாரிகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருகிறார்கள். அவை தாமதமானதாகவும் அளவில் சிறியவையாகவும் தோன்றலாம், ஆனால் கண்டிப்பாக நேர்மையானவையாகும். இந்த நீண்ட நெடிய பயணத்தின் முடிவில் நிச்சயம் ஒளி பிறக்கும், இருளர் வாழ்வில் உள்ள இருள் நீங்கும். அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கடமையாகும். இதுவே எங்களின் 'ஜெய் பீம்' முழக்கம் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.