தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுத்தையிடம் போராடி குழந்தையை மீட்ட தாய் - குவியும் வாழ்த்துக்கள்
வீட்டு வாசலில் இருந்த போது, கவ்விச் சென்ற சிறுத்தையிடம் தன் குழந்தையை போராடி மீட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மலைவாழ் பெண் ஒருவர்.
மத்தியப் பிரதேசம், சித்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரண். இவர் சஞ்சய் புலிகள் காப்பகத்துக்கு அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். தன் குழந்தைகளுடன், குடிசை வாசலில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஒரு சிறுத்தை, அவருடைய 8 வயது மகன் ராகுலை கவ்விச் சென்றது. இதனால், அதிர்ச்சி அடைந்த கிரண், தன் மற்ற இரண்டு குழந்தைகளை குடிசைக்குள் அனுப்பி விட்டார்.
சிறுத்தையை துரத்திச் சென்ற அப்பெண், காட்டுக்குள் 1 கி.மீ. தூரத்திற்கு ஓடிச் சென்றார். சிறுத்தையை கண்டு பிடித்து கம்பால் அடித்து தாக்கினார். இதனையடுத்து, குழந்தையை விட்ட அச்சிறுத்தை, அவரை தாக்கியது. சிறுத்தையுடன் அவர் உயிருக்கு போராடினார். இவரின் சத்தம் கேட்ட கிராம மக்களும் அங்கு ஓடிவந்தனர். அப்போது, அச்சிறுத்தை காட்டுக்குள் ஓடி தப்பிச் சென்றது.
சிறுத்தை தாக்கியதில், கிரண் மற்றும் அவருடைய மகனுக்கு காயம் அடைந்துள்ளனர். மிக வீரத்துடன் சிறுத்தையுடன் போராடி, தன் குழந்தையை காப்பாற்றிய அந்த தாயை, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பாராட்டினார்கள். தாயின் வீரச் செயலை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
குழந்தைக்காக தன் உயிரை கூட பொருட்படுத்தாமல் காப்பாற்றிய தாயின் பாசத்திற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.