சிக்கன் பிரியாணி ஆர்டர் - தட்டைப் பார்த்ததும் நெளிந்த புழு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
பிரியாணி ஓட்டலில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு பிரியாணியிலிருந்து புழு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலை சின்னார் என்ற இடத்தில் ஸ்டார் பிரியாணி ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் அப்பகுதியில் மிகவும் பிரபலம். இந்த ஓட்டலில் தினந்தோறும் 800 முதல் 1000 பேர் வரை சாப்பிட்டு செல்கிறார்கள்.
இந்நிலையில் காவேரிப்பட்டிணம் அடுத்த சப்பாணிபட்டி பகுதியை சேர்ந்த நண்பர்களான மூர்த்தி, அருண், இராமச்சந்திரன், அருள் ஆகிய 5 பேர் சின்னார், ஸ்டார் பிரியாணி ஓட்டலில் 4 சிக்கன் பிரியாணியினை ஆர்டர் செய்தனர்.
சிக்கன் பிரியாணி வந்ததும் அதில் பெரிய அளவிலான புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து இவர்கள் நிர்வாகத்திடம் கேட்டனர். அப்போது, கத்திரிக்காயிலிருந்து புழு வந்திருக்கலாம் என அலட்சியமாக நிர்வாகத்தினர் கூறி உள்ளனர். இதனால், கோபம் அடைந்த வாடிக்கையாளர்கள் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் உள்ள மேலாளருக்கு ஓட்டல் ஊழியர்கள் போன் செய்து கொடுக்க எதிர்திசையில் பேசிய மேனேஜர், பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா? சாப்பிட்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இதனையடுத்து வாடிக்கையாளர்கள் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.