நடுரோட்டில் உடலில் தீ வைத்து தற்கொலை செய்த பெண் - சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி - நடந்தது என்ன?
திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தெய்வாணை (45). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். திருநெல்வேலியை சேர்ந்த தெய்வாணை பிழைப்பு தேடி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் வந்திருக்கிறார். கே.வி.ஆர் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
வேலை பார்க்கும் இடத்தில் தெய்வாணைக்கும், உடன் வேலை செய்யும் நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொண்டு தன்னுடன் குடும்பம் நடத்துமாறு அந்த நபரை தெய்வானை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் தெய்வானையை திருமணம் செய்துக்கொள்ள அவர் மறுத்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தெய்வாணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அந்த நபருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறினார். இதனையடுத்து இருவரையும் காவல்நிலையம் அழைத்த போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இருந்தாலும், அந்த நபரை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க கோரி தொடர்ந்து காவல்நிலையம் வந்திருக்கிறார் தெய்வானை. எந்த பலனும் கிடைக்காததால், தெய்வானை விரக்தி அடைந்தார். இதனையடுத்து அப்பெண் தான் குடியிருக்கும் கே.வி.நகர் பகுதியில் பட்டப்பகலில் நடுரோட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்டார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.