ராஜஸ்தானில் கொடூரம் - மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த தந்தை - வீடியோ வைரல்

samugam-bullying-the-boy
By Nandhini Nov 26, 2021 07:01 AM GMT
Report

8 வயது சிறுவனை அவனது தந்தை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்க மாவட்ட எஸ்.பி.க்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆத்திரத்தில் மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தந்தை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 8 வயது சிறுவனை அவனது தந்தை வீட்டில் தலைகீழாக தொங்கவிட்டு அடிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலானது. பள்ளியில் கொடுத்த வீட்டு பாடங்களை 8 வயது சிறுவன் செய்யவில்லை.

இதனால், அவனது தந்தை தலைகீழாக கட்டி கொடூரமாக தாக்கியுள்ளார். கயிறு கட்ட அவனது தாயும் உதவி செய்திருக்கிறார். அந்த வீடியோவில், தந்தை சிறுவனின் கை மற்றும் கால்களை கட்டி வீட்டில் உள்ள சீலிங் பேனில் தலைகீழாக தொங்கவிடுகிறார்.

சிறுவன் தன்னை விடும்படி கெஞ்சுகிறான். ஆனால், மனம் இறங்காத தந்தை குச்சியை வைத்து சிறுவனை கொடூரமாக தாக்குகிறார். வலியால் அச்சிறுவன் அலறி துடிக்க, சிறுவனின் தாய் குறுக்கிட்டு அடிக்க வேண்டாம் என்று கூறுகிறார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நவம்பர் 17-ம் தேதி நடந்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அந்தப்பெண் தனது சகோதரன் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது இந்த வீடியோவை தனது சகோதரனிடம் காண்பித்து, அவர் செய்யும் கொடுமைகளை கூறி இருக்கிறார்.

இதனையடுத்து, சிறுவனின் மாமா, மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தகவல் கொடுத்தார். இது குறித்து அச்சிறுவனின் மாமா கூறுகையில், சிறுவனின் தந்தை எப்போதும் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டிருப்பார்.

இப்படித்தான் 5 வயது மகளையும் கொடுமைப்படுத்தி வருகிறார் என்றார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து, விசாரணை செய்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானில் கொடூரம் - மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த தந்தை - வீடியோ வைரல் | Samugam Bullying The Boy