பட்டினியால் 5 வயது சிறுவன் பலி - சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி
விழுப்புரத்தில் பட்டினியால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தச் சிறுவனின் உடலை மர்மநபர்கள் இருவர் சுமந்துசென்று தள்ளுவண்டியில் போடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், வடக்கு தெருவை சேர்ந்த சிவகுமார். இவர் விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் மேலத்தெருவில் தள்ளுவண்டியில் வைத்து சலவை தொழில செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை தள்ளுவண்டியில் போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாக கிடந்தான்.
இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த சிவகுமார், மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இது தொடர்பாக போலீசார், உயிரிழந்த சிறுவன் யார் என்பது குறித்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்த சிறுவனின் குடலில் கடந்த 2 நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இல்லை என்றும், இதனால் சிறுவன் பசியால் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இச்செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து, உயிரிழந்த சிறுவன் யார் என விசாரிக்க ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.
இந்நிலையில், சிறுவனின் உடலை மர்ம நபர்கள் 2 பேர் தள்ளுவண்டியில் போட்டுவிட்டுச் செல்லும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அதில், அடையாளம் தெரியாத 2 நபர்கள் சிறுவனின் உடலை சுமந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.
இதனையடுத்து, அந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.