திடீரென பாய்ந்து இளம் பெண்ணை கடித்துக் குதறிய நாய்கள் - அதிர்ச்சி சம்பவம்
கேரள மாநிலத்தில் பெண்ணை சூழ்ந்து 3 நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோழிக்கோடு அருகே தாமரசேரியில் ஒரு வீட்டில் பவுசியா என்ற இளம் பெண் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல பணி முடித்து விட்டு, அந்த வீட்டு வாசலுக்கு வந்து பேருந்துக்காக அவர் நின்றுக் கொண்டிருந்தார். திடீரென பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்கள் பவுசியாவை சூழ்ந்து கொண்டன. நாய்கள் அவரை பவுசியாவைப் பார்த்து குரைத்தபடி நின்றுக் கொண்டிருந்தன.
இதனால், அங்கிருந்து நகராமல் அச்சத்துடன் வெறும் கைகளை காட்டி நாய்களை விரட்டிக் கொண்டிருந்தார் பவுசியா. ஒரு கட்டத்தில் சாலையை கடக்க அவர் முயற்சி செய்த போது, நாய்கள் பாய்ந்து வந்து அவரை சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. அவரது அலறல் சத்தம் கேட்டு, நாயின் உரிமையாளர் ஓடோடி வந்து, பவுசியாவை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனாலும், அந்த நாய்கள் அவரை விடாமல் தொடர்ந்து கடித்து குதறிக் கொண்டிருந்தது. உடனே, அங்கிருந்த பொதுமக்களும் நாய்களை விரட்ட முயற்சி செய்தும் முடியவில்லை.
இந்நிலையில், இறுதியாக அருகில் இருந்த கம்பு மற்றும் கற்களை வீசி தாக்கி, நாய்களை விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் ரோஷன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு இன நாய்களை கவனக்குறைவாக வளர்த்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.