மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : 4 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாப பலி
மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கமலா நேரு அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3ம் தளத்தில் குழந்தைகள் வார்டு பிரிவில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40 குழந்தைகள் சிக்கிக் கொண்டது. உடனே இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. மீதமுள்ள குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இரங்கலை தெரிவித்திருக்கிறார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.