நடிகர் அஜீத்தை பகத்சிங் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் - மதுரையில் பரபரப்பு
நடிகர் அஜீத்தை பகத்சிங் போல் சித்தரித்து அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அடுத்த மாதம் பொங்கல் அன்று வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மதுரையின் அடங்காத அஜீத் குரூப்ஸ் என்ற நடிகர் அஜீத்குமார் ரசிகர்கள் அஜீத்தை புகழும் விதமாக வருடங்கள் கடந்தாலும் வலிமையும் வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.
அதில் நடிகர் அஜீத்தின் உருவத்தை சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் போல சித்தரித்திருக்கிறார்கள். இந்த சுவரொட்டி மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
சமீபத்தில் நடிகர் விஜய் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் போல தனது படத்தை சித்தரித்து வெளியிட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார். நடிகர் அஜீத்தும் இதுபோன்ற விஷயங்களை விரும்பாத நிலையிலும், ரசிகர்கள் இவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.