200 அடி பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த கார் - குழந்தை உட்பட 3 பேர் உடல் நசுங்கி பலி - சோகச் சம்பவம்
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்துக்கொண்டிருந்த போது, கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், தேனூரைச் சேர்ந்த கோகுல். இவர் வழக்கறிஞர். இந்நிலையில், தீபாவளி விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார் கோகுல். மனைவி நந்தினி, குழந்தை தன்யா, மாமியார் அழகுராணி மற்றும் நண்பர் கார்த்திக்கை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். சுற்றுலா முடித்துவிட்டு நேற்று இரவு இவர்கள் கொடைக்கானலிலிருந்து சொந்த ஊருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
காரில் வந்துக்கொண்டிருந்த போது, அடுக்கம் வழியாக பெரியகுளம் சாலையில் இருக்கும் வளைவில் திரும்பிய போது கார் நிலைதடுமாறி 200 அடி பள்ளத்தில் விழுந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடடியாக போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோகுலின் மனைவி நந்தினி, அவரது குழந்தை மற்றும் மாமியார் ஆகிய 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கோகுல் மற்றும் அவரது நண்பர் கார்த்திக்கை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.